அன்றைய விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யின் மேஜர் இக்பால், லஸ்கர் அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில், ரானாவுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தினோம் என ஹெட்லி ஒப்புக் கொண்டார். ஹெட்லியிடம் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டதைப் பற்றி ஹெட்லி விரிவாக எடுத்துரைத்தார். ரானாவின் பங்கு பற்றியும் விளக்கினார்.
மேலும் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஐஎஸ்ஐ மற்றும் லஸ்கர் அமைப்புகளுடன் அடிக்கடி இ-மெயில் மூலம் பரிமாறிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். ஐஎஸ்ஐ மற்றும் லஸ்கர் அமைப்பு தன்னை தேர்வு செய்த விதம் பற்றி கூறிய அவர், மேஜர் இக்பால் மற்றும் லஸ்கர் அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சையத்தை 2008 அக்டோபரில் முதன் முதலாக சந்தித்ததாக தெரிவித்தார்.
" மும்பை தாக்குதல் தொடங்கியவுடன் அதுபற்றி எனக்கு எஸ்எம்எஸ் வந்தது. உடனே தொலைக்காட்சியில் அதைப் பார்த்து ரசித்தேன். திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தியது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்" இவ்வாறு ஹெட்லி தெரிவித்தார். செப்டம்பர் மாதத்திலேயே தாக்குதல் நடத்த ஒரு குழு பாகிஸ்தானிலிருந்து படகில் புறப்பட்டதாகவும், ஆனால் படகு விபத்துக்குள்ளானதால் தாக்குதல் தாமதமானதாகவும் அவர் கூறினார்.
ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் மும்பை விமான நிலையம், கடற்படை விமான நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், அங்கு தாக்குதல் நடத்த முடியாது என்பதை தெரிவித்தவுடன் மனமுடைந்ததாகவும் ஹெட்லி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பல ஹெட்லிகளை பார்த்திருக்கிறேன் : பால்தாக்கரே அறிக்கை!
சிகாகோ நீதிமன்றத்தில் தீவிரவாதி ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில், ‘சிவசேனா தலைவர் பால்தாக்கரேவை கொலை செய்ய ஐ.எஸ்.ஐ.யும், லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பும் சதி திட்டம் தீட்டின. பாகிஸ்தானில் தன்னை வழி நடத்தியவர்கள் இந்துத்துவா கட்சியான சிவசேனா மீது கடும் வெறுப்பில் இருந்தனர்’ என்று கூறினான்.
இது பற்றி பால்தாக்கரே நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘என்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியது பற்றி நான் பயப்பட மாட்டேன். ஹெட்லியையோ அல்லது அவன் அளித்த வாக்குமூலத்தையோ கண்டு நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் இது போன்ற பல ஹெட்லிகளை பார்த்திருக்கிறோம். எனது பாதுகாப்புக்கு சில தொண்டர்களே போதும்’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment