20ம் தேதி முதல்வராகிறார் மம்தா : பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோரை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வரும் 20ம் தேதி நடக்கவுள்ள பதவியேற்பு விழாவுக்கு, வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, வரும் 20ம் தேதி, கோல்கட்டாவில் நடக்கும் விழாவில், மம்தா பானர்ஜி, புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையும் அன்று பதவியேற்கிறது.பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோரை அழைப்பதற்காக, மம்தா பானர்ஜி, நேற்று டில்லி சென்றார். ஜன்பாத்தில் உள்ள சோனியாவின் வீட்டுக்குச் சென்ற மம்தா பானர்ஜியை, வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் சோனியா. மம்தா கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சோனியா, அவரை தட்டிக் கொடுத்து, வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த மம்தா கூறியதாவது:வரும் 20ம் தேதி, எனது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கிறது. பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, சோனியாவுக்கு அழைப்பு விடுத்தேன். மேலும், அமைச்சரவையில் காங்கிரசும் பங்கு பெற வேண்டும் என்றும், அவரிடம் வலியுறுத்தினேன்.ரயில்வே அமைச்சர் பதவியை, அடுத்து யாருக்கு கொடுப்பது என்பது குறித்து, பிரதமர் தான் முடிவு செய்வார். எங்கள் கட்சியை சேர்ந்த முகுல் ராயுக்கு, ரயில்வே துறை கொடுக்கப்படுமா என்பது குறித்து, நான் பதில் அளிக்க முடியாது. தேர்தல் கமிஷனிடம் சில விவரங்களை அளிப்பதற்காக, முகுல் ராய் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று விட்டார். அதனால், இங்கு வரவில்லை.
இவ்வாறு மம்தா கூறினார்.
இவ்வாறு மம்தா கூறினார்.
இதன்பின், பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்று, பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, அவருக்கும் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பதவியேற்பு விழாவுக்கு, பிரதமர் வர மாட்டார் என, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி, மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர். காங்., அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற என்.ஆர். காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் கடிதம் அளித்தார். இதையடுத்து, புதிய முதல்வர் பதவியேற்பு விழா, ராஜ்நிவாசில் நேற்று மதியம் நடந்தது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்பது தொடர்பான ஜனாதிபதியின் ஒப்புதல் ஆணையை, தலைமைச் செயலர் சந்திரமோகன் வாசித்தார். கவர்னர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் ரங்கசாமி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், ராஜ்யசபா எம்.பி., கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க.,வினர் யாரும் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்க, சென்னைக்குச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதம் இருமுறை வாசிப்பு : ராஜ்நிவாசில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் இக்பால்சிங், ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, இதுகுறித்த ஆவணத்தில் ரங்கசாமி கையெழுத்திட்டார்.
விழா முடிந்துவிட்டது என்று கருதிய போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர், தேசிய கீதம் இசைத்தனர். விழா முடிவதற்கு முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின், ரகசிய காப்பு உறுதிமொழியை ரங்கசாமி எடுத்துக் கொண்டார். இதையடுத்து, இரண்டாவது முறையாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது.
கூட்டணி ஆட்சியா? முதல்வர் தகவல் என்.ஆர். காங்., தனித்து ஆட்சி அமைக்கிறதா? அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஆட்சி அமைக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "ஜெ., ஆதரவுடன் ஆட்சி நடத்துவோம்' என்று கூறினார். மேலும், "தமிழக முதல்வர் ஜெலலிதாவை சந்தித்து பேசுவேன்' என்றும் தெரிவித்தார்
No comments:
Post a Comment